கல்யாணக் கனவு

காதல் என்று நீ சொன்னாய்
கடவுள் என்று அதை ஏற்றேன்.
இன்னும் சிறிது காலம் சென்றிருந்தால்
தாவணிக் கழுத்து - சேலை
ஏத்தாப்பை ஏற்றிருக்கும் - ஏத்தாப்பு
எட்டாத கதிரைக்கும்
எனக்கும் மேலிருந்திருக்கும் - அதன்மேல்
வீட்டுவளையிருக்கும் - அங்கு
நாக்கு இழுத்திருக்கும்
கண் விறைத்திருக்கும்;
தலை கவிழ்ந்திருக்கும்
வீடு நிறைந்திருக்கும்
இல்லையேல்,
குழி விழும் கன்னத்தை மறைத்து
குமரிபோல் நான் இருக்க - தினம் போடும்
வெற்றிலைக்குப் பாக்காய்
அலரிக்காய் - என் வாயின்
அடி நிறைத்திருக்கும்
ஆவென்று கிடந்திருப்பேன்
அழுது கொண்டிருக்கும் அம்மா - அன்றுடன்
ஆறுதல் கொண்டிருப்பாள்.
கவலையின்றி பழுக்க
கண்டுக்காமல் நான் இருக்க
முடியே பழுத்துத்து இவளுக்கு - திருமணம்
முடியவாபோகுது - எல்லோரும்
ஏளனமாய்ப் பேச எடுப்பாக இருக்கட்டுமே
இப்பவும் இளசு நான் - முடியை
கறுப்பாக்கப் போடும்
டையும் - என் இறுதி
டேயும் அக்குப்பியில் இருந்திருக்கும்.
இல்லையேல்
கள்ளமில்லா ஆற்றோடு
காதல் கொண்டு - மொத்தமாய்
அள்ளி அணைத்து அதன் வழியே
இல்லையென்று சொல்லாது
இறுதிப் பயணம் செய்திருப்பேன்.
காதல் என்று நீ சொன்னாய்
கடவுள் என்று அதை ஏற்றேன்.
துடித்த இதயம் துதிக்கிறது - இப்போ
அதற்கும் மெல்லப் பசிக்கிறது.
- சதாசிவம் டினேஸ்காந், படையாண்ட வெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.