கொரோனாவை வெல்வோம்

அழையா விருந்தாளியாய்
அண்டத்தை ஆட்டிப்படைக்கும்
கொரோனா எனும் கொடியவனே
இயந்திர மனிதர்களாய்
இயங்கிக் கொண்டிருந்தவர்க்கு
சுதந்திர வீட்டுச் சிறையில்
சுயத்தைக் கற்றுக் கொடுக்க
சூழ்ச்சி செய்து வந்தாயோ?.
வேலைப் பளுவால் எம் வீட்டில்
விருந்தினராய் மாறிப்போன
தந்தைக்குப் பாடம் புகட்ட
தாவி வந்தாயோ?
எதைஎதையோ எதிர்பார்த்து
எதற்காகவோ பாடுபட்டு
எதையெல்லாமோ சேர்க்க
எண்ணில்லாக் கடனில் வாழும்
எண்ணற்றோர் வருந்த
எமனாய் வந்தாயோ?
எல்லாம் உண்டு எம்வீட்டில்
எங்கும் அலங்காரப் பொருட்கள்
எழில் கொஞ்சும் வனப்புடன்
எதிர்பாரா விருந்தினர் வருகை
எப்போதும் உண்டென்பதால்
எண்ணற்ற உணவுவகைகள்
எம் வீட்டு மேசையில்
என இறுமாந்து இருந்தவர்க்கு
எவரும் வாரார் உன் வீட்டில்
எதுவும் நிரந்தரமன்று
எனக் காட்ட குதித்து வந்தாயோ?
புரிந்து கொண்டேன் நான்
புவியில் ஏழைகளின் நிலையை
அறிந்து கொண்டேன் நான்
அன்பு ஒன்றே நிரந்தரம் என்று
என் கையருகே இருந்தாலும்
எனக்குமட்டுமே சொந்தமில்லையென
இருப்பினும் நீ கொடியவ்னே
இறுமாந்து பரவாதே
உதவி செய்வது போல் பல்கிப்பெருகி
உலகை வசப்படுத்தும் முடிவை மாற்று.
எம் இந்தியர் எதற்கும் அஞ்சார்...
எம்மை வழி நடத்தும்
எம் தலைவர்கள் வழியில்
உலக நாடுகளுக்கு முன்னோடியாய்
உள்ளத்தால் ஒன்றுபட்டு
உருவத்தால் தனித்து அவரவர்
உறைவிடத்தில் இருந்து
உறுதியுடன் போராடி விரைவில்
உதைத்துத் தள்ளுவோம் உன்னை
உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும்...
- நாங்குநேரி வாசஶ்ரீ, சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.