பாட்டி வடை சுட்ட கதை
தொடங்கியது கதையொன்று
கதைகளின் கதையாக...
ஆதிக் கிழவியின்
பொக்கை வாய்வழி
பெருகிய பெருமலாய்
பெருகியது அக்கதை...
பேரிகை கொட்டி
அசைத்தாலும்
அலையாத கவனத்தில்
பிளந்த வாய்
பிளவாத காது...
பாட்டி சுட்ட
வடையொன்று
களவு கொண்ட
காக்கைக்கல்ல
தந்திரக்கார
நரிக்குத்தானாம்...
சுடச்சுட
குவிந்த வடைகள்
வயிறு புடைத்த
நரியின்
விலகாத
காத்திருப்பு...
வாய்த்திருந்தும்
வாய்க்கெட்டா
வாழ்கை - இன்று
மாறியிருந்தது
பாட்டியின் வடையாய்
பெரும் கதையாய்...
ஓயாமல்
நரியும்
காத்திருக்கின்றது
வடையுடை காகத்தின்
கதைக்கும்
அவ்வடைக்கும்...
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.