மீண்டும் அந்தப் பறவை
எப்போதோ கேட்ட
அலகின் சப்தம்
மீண்டும் கேட்கிறது...
ஆம்...
இல்லத்தின் அதே
முன் சாளரத்தில் தான்...
அதே பண்ணோடு...
முன்றிலின்
கூரைப் பொந்தில்
முதிர்ச்சிகையென
வழியும் அதன் கூட்டில்
அதன் நுழைவும்
புறப்பாடும்
கண்டு களிக்கும்
காட்சி
தொலைந்திருந்தது
தெரியாமலேயே...
விரைந்து சென்று
எட்டிப்பார்தேன்
அதே பறவைதான்
மீண்டும் வந்திருந்தது...
ஓட்டிலிருந்து
சிமெண்ட்டிற்கு
மாறிப்போன
முன்றில் கூரையில்
தேடிக்கொண்டிருந்தது
அதன் கூட்டை...
- முனைவர் கோ. சுனில்ஜோகி, கோயம்புத்தூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.