என்னைத் தேட வேண்டாம்...
என் அருமை மானுடமே!
என்ன வந்தது உங்களுக்கு?
அறிவுறுத்திச் சொன்னால்
அடங்க மறுப்பவருக்கு
பண்பாகச் சொன்னால்
புத்தியில் உறைக்காதவருக்கு
கனிவாகச் சொன்னால்
காது கொடுக்காதவருக்கு
கண்டிப்புடன் சொல்கிறது உம்
கண்ணியம் மிக்க காவல்துறை
கேட்க மறுக்கிறாயாமே
கேள்விப்பட்டேன்
கால்கடுக்க நிற்கும்
காவலருக்குச் சவால்விடுத்து
வெளியில் சுற்றித்திரிய
வெட்கமாக இல்லை உனக்கு
அகப்பட்டால் மூட்டைமூட்டையாய்
அவிழ்த்துவிடுகிறாயாம் பொய்களை
ஒருவேளை உணவை
ஒழுங்காக உண்ண முடியாது
தாகம் எடுக்கும் நேரம்
தண்ணீர் பருக இயலாது
வெயில் மழை எனப்பாராது
அவத்தையுறும் அந்நேரமும்
அறிவுரை கூறி உன்னைத்
தடுக்க முற்பட்டால் உனக்குத்
தின்ற சோறு செரிக்கவில்லையாமே?
ஊரடங்கிக்கிடக்கும் நேரம்
உல்லாசம் தேவையோ உனக்கு?
தவற்றைப் புரியவைக்க அரசுக்கு
பரிந்துரைத்துவிட்டேன்
பிடிபட்ட அனைவரும்
தற்காலிகப் பணியில்
தூங்காமல் இரவுபகல் முழுதும்
காவலராய்க் கால்கடுக்க நின்று
கடமையாற்ற வேண்டுமென்று.
எம் அருமை மானுடமே...
என்ன வந்தது உங்களுக்கு?
கடவுளுக்கு அடுத்தநிலையில் எம்
கடமை தவறா மருத்துவக் குடும்பம்
கண்ணுறக்கமின்றி உன்னைக்
காப்பாற்றப் போராடுவதைத்
தொலைக்காட்சி வாயிலாய்த்
தொல்லையில்லாமல் அறையின்
காற்றாடிக்குக் கீழமர்ந்து
கண்டதையும் தின்றுகொண்டு
கண்ணுற்றபின்பும் மனதில்
கவலை என்பது உனக்குக்
கடுகளவும் இல்லையோ?
நோய்த்தொற்று சோதனை செய்ய
நடையாய் நடந்து வந்தவரைக்
கல்லெறிந்து அடித்து விரட்டிய
கயவர்களையும் நானறிவேன்
எனக்குக் கண்ணில்லை
என்று யார் சொன்னார்
உருண்டையாய் உள்ள எனக்கு
உடல் முழுதும் கண்கள்
உலகில் நடப்பதை நான்
உடனுக்குடன் அறிவேன்
வாழ்க்கையின் தேவையை
விளங்கிக் கொள்ளாது
அளவுக்கு அதிகமாய்
அனைத்தையும் சேர்த்து
அடுத்தவரைப் பற்றி
அணுவளவும் கவலைப்படாது
வாழும் சுயநலங்களுக்கு
வித்தியாசமாய்ப் பாடம்
புகட்டவே நான் வந்தேன்
பாரதத்தோரே யாரும்
பதட்டப்பட வேண்டாம்
கிளம்பிவிட்டேன் நான்
கவலைப்படாதீர்கள்
போவதற்கு முன் உங்களுக்கு
புத்திசொல்ல விழைந்தேன்
அவ்வளவுதான்..
அடுத்தவரை மதித்து நடந்தால்
அருகில் கூட நான் வரமாட்டேன்
பகுத்து உண்டு வாழ்பவரின்
பக்கத்தில் கூட நிற்கமாட்டேன்
கவிதையைப் படித்து முடிக்கும்போது
கரோனா எனும் நான்
காணாமல் போயிருப்பேன் யாரும்
என்னைத் தேட வேண்டாம்...!
- நாங்குநேரி வாசஶ்ரீ, சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.