தனித்திரு... விழித்திரு...!
நேர்மறை எண்ணங்களை ஏற்றிடு மனதில்
நேரும் துன்பமும் இன்பமென்றாகும்
நேற்றைய பொழுது கடந்திடட்டும்
இன்றென்பது இனிதாகட்டும்...
இனி,
என்பது பற்றிக் கவலை ஏன்?
இக்கணத்தில் வாழ்,
இனிது வாழ்...
எதிர்மறைச் சிந்தனை அகற்று
சுற்றிச் சுற்றிப் புறத்தில் மொய்க்கும்
ஈக்களைப் புறந்தள்ளு
அகம் மலர்த்து, ஆற்றல் பெறு
உலகெங்கும் உலவுகிறது ஈ
அரசாணைக்கு அடங்கு
தனித்திரு, விழித்திரு...
அடக்கம் மனிதனாக்கும்
அடங்காமை மாயமாக்கும்
சித்தம் சுத்தி செய்ய
நித்தமும் பயிற்சி செய்
ஓடிக் கொண்டே இருந்த மனிதனுக்கு
ஓய்வு கொடுத்திருக்கிறது இயற்கை
மறுசுழற்சியால் தன்னையும் சுத்திகரிக்க,
காற்றுமண்டலம் விடுகிறது நிம்மதிப் பெருமூச்சு
ஆட்களின் கூட்டத்தால் அவதிப்பட்ட இடங்களும்
விடுகிறது ஆசுவாசப் பெருமூச்சு
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலாம்
இருந்த இடத்திலேயே இயற்கை நுகர்
இனிமை உணர், மறுசுழற்சியால் மாநிலம்
மயக்கத்திலிருந்து வெளிவரட்டும்
பின்னர் வா வெளியே...
வெளியின் தூய்மை உணர்
சித்தம் சுத்தமாகும்...
பின் சுகமாய்ச் சுவாசி
என்றும்... என்றென்றும்…
- முருகேஸ்வரி ராஜவேல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.