உன் அடங்கு எந்நாளோ...?
அச்சத்தின் உச்சத்திற்கு
அழைத்த கொரோனாவே!
நீ பிறக்கும் போதே
பசியில் பிறந்திட்டாய்...
உன் பசியோ பெரும் பசி
உனக்கு இரையாய் பல உயிர்கள்.
உன் பசி நீங்க,
இங்கு பல உயிர்களைப்
பசியின் கொடுமையில் வாடச் செய்கிறாய்...
கொரோனா வைரசே...
நீ அடங்க ஊரடங்கு...
நெருக்கம் தளா்ந்து சமூக இடைவெளி..
அழகைப் பேணிய முகமூடியோ
உயிரைப் பேணுகிறது.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்த
வதுவையோ,
கிருமி நாசினி தெளித்து
முகமூடி அணிந்த
சுகாதார வதுவையாய் மாறிற்று.
பல பானங்கள் தவழ்ந்த கைகளில்
இன்றோ கபசுர பாணம்
திரைப்படப் பாடல் முணுமுணுத்த வாய்களில்
இன்றோ உன்னால் எழுத நோ்ந்த
உனக்கான பாடல்...
இப்படி...யாக...
உலகமெங்கும் உன்னை எதிர்த்துப்
போராட முடியாமல் பலரும்
அடங்கிக் கிடக்கின்றனர்.
அலட்சியம் ஆபத்தைத் தருமென்பதை
அறியாது அலைந்து திரியும் சில
ஆட்களும் இங்கு உண்டு...
உலகம் முழுமையும்
ஆட்டிப் படைக்கும்
கொரோனாவே...
ஊரடங்கு போல்
உன் அடங்கு எந்நாளோ?
- மா. முத்து காயத்ரி, அம்மன் நகர், சிவகாசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.