பௌர்ணமி இரவு
அதுவொரு
பெளர்ணமி இரவு
பால் மஞ்சள்
ஒளியாடையுடுத்தி
அவள் வரப்போகிறாள்...
அண்டமெங்கும்
கருமூச்யிறுக்கி
அமைதியாயிருக்கிறது...
அதோ
ஆகாயச் சாரலத்தில்
கொஞ்சமாய்
வெளிச்சக் கதவு திறக்கபடுகிறது...
மேகக் காகிதத்தில்
தங்க முலாம் கலந்த
கலவை கொண்டு
மெல்லிய ஓவியங்கள்
வரையப்படுகிறது...
வனமெங்கும் தென்றலவன்
தவழ்ந்து போகையில்
ஒளிக்குலுங்களோடு
தாவரக்கிளைகளில்
சிணுங்கல்...
‘இதோ வந்துவிட்டாள்'
வான்மாடமெங்கும்
பரவி நிற்கிறாள் அவள்...
நீர் நிலைகளோ
வரம் பெற்றார்போல் தன்னில்
குளிராடிக்கொண்டிருக்கும்
அவளை
அலைக்கரங்களால்
வணங்கியபடியே இருக்கிறது...
அதுவொரு
பெளர்ணமி இரவு..!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.