ஏழையரை ஏற்றணைப்போம்

உயிர் பறிக்கும் கிருமியொன்று
ஊருக்குள் வந்ததென்று
உயிர்காக்க அரசாங்கம்
ஊரடங்கைப் போட்டதிங்கே !
வீட்டுவாசல் கடப்பதற்கும்
வீதியிலே நடப்பதற்கும்
போட்டுவிட்டார் தடைகளினை
பொழுதெல்லாம் அடைத்து வைத்தார் !
தொழிற்சாலை மூடிவிட்டார்
தொடர்பணிகள் முடக்கிவிட்டார்
வழித்தடத்தில் சென்றுவந்த
வாகனங்கள் நிறுத்திவிட்டார் !
கூலிவேலை ஏதுமில்லை
குடல்பசிக்கு வழியுமில்லை
காலியான குடிசையுள்ளே
கண்ணீரில் வாடுகின்றோம் !
முகக்கவசம் அணிந்து கொண்டால்
மூண்டபசி அடங்கிடுமா
நகவிரல்கள் கழுவிக் கொண்டால்
நாவறட்சி தீர்ந்திடுமா !
தெருவினிலே நிற்க வைத்து
தேறுதலாய்க் கொடுக்கின்ற
ஒருவேளை பொட்டலத்தால்
ஓடிடுமா நாள் பசிதான் !
சாலையிலே காவலர்கள்
சாட்டையுடன் நிற்கின்றார்
வேலைதேடி வீதி வந்தால்
விரட்டியோட அடிக்கின்றார் !
பெட்டியிலே பணமிருப்போர்
பேசாமல் வீட்டுக்குள்
கட்டுடனே இருக்கின்றார்
கவலையின்றி உறங்குகின்றார் !
கட்டுகட்டாய் பணமிருப்போர்
கைகழுவி உண்கின்றார்
வெட்டிகதை பேசியொன்றாய்
வீண்பொழுது கழிக்கின்றார் !
அடுத்தவேளை உணவுக்காய்
ஆலாகப் பறக்கையிலே
படுத்து வீட்டுள் இருயென்றால்
பாடையில்தான் கிடக்க வேண்டும் !
தேவைகளைக் கொடுக்காமல்
தெருக்களினை மூடிவிட்டால்
நாவைத்தான் தின்றுவிட்டு
நாறித்தான் சாகவேண்டும் !
அன்றாடக் காய்ச்சியர்க்கு
அரசாங்கம் துணைநின்று
அன்போடு அணைத்தால்தான்
அவலங்கள் தீருமிங்கே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.