கவசத்தை உடைக்காதே

செம்மொழி நமதென்று செம்மாந்த வேளையிலே
செப்பிடும் அயல்மொழியே அயர்வினைத் தந்திடுதே,
பைந்தமிழ் நமதென்று பரவசமாகும் வேளையிலே
பாடுபொருளில் கலப்பென்றால் உளம் பரிதவித்து நிற்கிறதே,
சுந்தரத் தமிழ் நமதென்று சுகமாய் எண்ணும் வேளையிலே
சுற்றியுள்ளோர் மொழியைச் சுத்தி எடுத்துத் தகர்ப்பதென்னே?
செந்தமிழ் நமதென்று செப்பிடும் வேளையிலே
செம்மையிலா மொழிக்கலப்பு சேதமே செய்வதென்னே?
முத்தமிழ் நமதென்று முழக்கமிடும் வேளையிலே
மூழ்கித்தான் போவதென்னே? முறையில்லாப் பயன்பாட்டால்
கன்னித்தமிழ் நமதென்று களிப்புறும் வேளையிலே
கடினமான மொழிப்புழக்கம் கசப்பைத் தருவதென்னே?
நற்றமிழ் நமதென்று நாமிருக்கும் வேளையிலே
நலமிழந்த தமிழ் பேசி நலிவுறவே செய்வதென்னே?
வண்டமிழ் நமதென்று வலிமை பெறும் வேளையிலே
வஞ்சனையால் நம் மொழி வளமிழந்து போவதென்னே?
ஒண்டமிழ் நமதென்று ஒப்பிலா மகிழ்வெய்தும் போதினிலே
ஒப்பற்ற மொழியது ஒளியிழந்து போவதென்னே?
கணி(னி)த் தமிழாய் நம் மொழி கனிந்து வரும் வேளையிலே
கணக்கிலா மொழிச்சிதைப்பும் கடினமாய் நிகழ்வதென்னே?
எந்தமிழே தாயே உனை நாளும் என்னுள் வைத்துப் போற்றிடுகையில்
எங்கிருந்தோ வந்த கூட்டம் எம்மொழியைத் தூற்றுவதோ?
அமுதத்தமிழே உனை ஆராதனை செய்கின்றேன்
ஆற்றல் எனக்குத் தந்திடு அந்தமிலா என் தாயே!!
- முருகேஸ்வரி ராஜவேல், திண்டுக்கல்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.