கடற்கரை
ஓ! பெண்ணே…
கடலலையாய் நான்
கடற்கரையாய் நீ
தினம் உன்னை
தொட்டுச் செல்லத்தான்
முடிகிறது என்னால்
கூட்டிச் செல்ல
முடியலையே…!
கடற்கரைத் தென்றலே
காதலர் வருவதறிந்து
வீசுகிறாயோ தென்றலை
தேகம் சிலிர்சிலிர்க்க
நெஞ்சம் படபடக்க
உடல்கள் நடுநடுங்க
உறவுகள் கைகொடுக்கத்
தென்றலும் தேகம்வருட
இனிதாய் கழிகிறது
மாலையெனும் மகிழ்வு…
கருநீலக் கடலே ஏன்?
வானத்திற்கு உன் நிறத்தைத் தந்தாய்
அது உனக்கு நீரைத் தருவதினாலா?
நித்தம் உன்னைத் தொடுவதினாலா?
நானும் தான் நினைக்கிறேன்
உன்னை அள்ளி பருகவேண்டுமென்று
உவர்க்கிறாயே உரிஞ்ச முடியவில்லை
உவர்ப்பை விட்டுவிடு உஞ்சிவிடுகிறேன்
முழுமையாய் என்னுள் வந்துவிடு…
காலையில் சூரியனை உமிழ்கிறாய்
மாலையில் சூரியனை விழுங்குகிறாய்
ஏன் இந்த மாற்றம்
சொல்லேன் எனக்கும்தான் கொஞ்சம்!
சூரியனின் சூடு தாங்காமல்
காலையில் உமிழ்கிறாய்
மாலையில் குளிர் தாங்காமல்
விழுங்குகிறாய்
இதுதானே உண்மை சொல்லேன்!
சந்திரனை மாலையில் உமிழ்கிறாய்
காலையில் விழுங்குகிறாய்
இதன் தேவைதான் என்ன?
எனக்கும்தான் சிறிது சொல்லேன்!
- பீ. பெரியசாமி, விளாப்பாக்கம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.