மருவ விட்டோம்

தம்பியும் நானும்
மாமியின் மகனும்
பக்கத்து வீட்டுச் சஞ்சீவனும் சங்கரும்
நக்கீரனும் நகுலேசுமாய்
ஆமெணக்கு காயிலிலே
அரை நொடியிலே மெசின் செய்து
அதற்குப் பெட்டிபூட்டி
கலப்பை கிளப்பி நிற்க - ஈராக்கில்
கம்பி குத்தி
நெருப்புப் பெட்டியில்
ரயில் பெட்டி செய்து
மணல் ஏற்றி சுரக்காய் இழுத்து
பத்துமணி தாண்டி - அம்மா
கத்திக் கூப்பிடும் வரை
சுத்திசுத்தி ஆடிய விளையாட்டுக்கள்
சத்தியமாய் இன்றில்லையே.
கள்ளன் பொலிஸ் ஆடி
களைத்துப் போய்
சாரனுக்குள் - உடலை
முழுதாய் புதுத்தி - ஆற்றுமணல்
கும்பத்தில் உருண்டு - நடு இரவில்
விரல் வைத்துவெட்டி - பொங்கலோடு
தந்தனுப்பும் துண்டு றொட்டிக்காய்
மறுநாள் பள்ளியை மறக்கும்
சாமிச் செய்கைகள் இப்போதில்லையே.
மாலையிலேப் போவோம் - அங்கு
பல்லி கத்தினால்தான்
படையல் எடுப்பார்கள்
பரம்பரை நியதி- பசி தாக்க
பின்சுவர் ஓரம் - பல்லி போல் நின்று
அச்சுஅசலாய்க் கத்தி
ஆட்களை நம்ப வைத்து
படங்கிலே பந்தியிருந்து
தாமரை இலையில்
தயிரோடு உண்டு - வண்டி வைத்த
வயிறோடு வீடு செல்லும்
மகாளயத்தை மருவ விட்டோம்.
போளினில் இருந்தால்தான்
பொங்கலுண்டு - மூன்றாவது லைனில்
இடத்தை எடுத்து குந்தித்து இருந்தால்
வருகின்ற பானக்கரமும் பொங்கலும்
கை நனைக்கக் காணாது - மறுநாளாது
கை நிறைய வாங்கனும் - நேரத்துடன்
பொங்கல் வாங்கவாவது
கோவில் போகும் பழகத்தையும் விட்டுவிட்டோம்.
எல்லாம் தொலைத்துவிட்டு
ஏதோ ஒன்றைத் தேடுகிறோம்
நகரமாய் கிராமமும் - நாகரீகமென்று
நம்முடைய பண்பாட்டை மறக்கிறதே...
- ச. டினேஸ்காந், படையாண்ட வெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.