சுதந்திர சுவாசம்

அடையாளப்படுத்திக்கொள்ள
ஆண்டுக்கொருமுறை
வந்து போவதற்கல்ல
விடுதலை ஞாபகம்
அடிமைப் புழுக்கத்திலிருந்து
அகிம்சை சாரளவழியாக
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
தியாகத்துளிகளின்
பெருவெள்ள நகர்வில்
பேதமற்ற முயற்சியாய்
ஒற்றுமை நதி நீண்டதில்
இமயந்தொட்ட குமரிவரையான
ஓருணர்வு எழுச்சியில்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
இருண்ட போராட்ட நாட்களில்
கனன்ற முழக்கங்களிலே
உதிர்ந்த குருதி
உடைந்த எழும்பு
சிதைந்த சதை
எரிந்த, புதைந்த உடல்
எல்லாம் மீட்சியாய்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
தன்நலச்சாயலின்றி
இந்தியப்பொதுமையில்
எந்திரமேதுமின்றி
உப்புக்கரைத்தலில் கூட
அன்னியாளுமை ஓர்நாள்
கரையும் நம்பிக்கையாய்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
இங்குமங்கும்
ஓடித்திரிய வெளியிடம்
பேசிக் கூடிக்களிய உரிமைகள்
இவையனைத்தும்
சேர்ந்திருந்த கருத்துக்களின்
உறுதி உயிர்ப்பாய்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
ஒதுங்குதல் கூடாத
எம்தேசமே மூச்சென்ற
தலைகவிழாத
தன்மானச்சிந்தனையில்
ஜனநாயக நுகர்வாய்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்...!
யாருக்காய்
எதற்காய்
பாகுபாடற்ற பாதையில்
முன்னோர் தடங்களென்று
எண்ணச்சீர் சுத்திகரிப்பாய்
வந்து கலந்ததன்றோ
சுதந்திர சுவாசம்!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.