சும்மா வந்ததல்ல சுதந்திரம்

அடிதடிகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
ஓடி ஒளியாத
உத்தமர்கள் பெற்றுத் தந்தது
இம்மென்றால் வனவாசம்
ஏனென்றால் சிறைவாசம்
என்றெல்லாம் வலிதாங்கி
இரும்பு மனிதர்கள் பெற்றதிது
வழக்கென்றவுடன் புற
வாசல் வழியோடி
நெஞ்சைப்பிடித்து மருத்துவமனைகளில்
நேரே இடம் பிடிப்பவர்களால் வந்ததல்ல.
குண்டாந்தடியால் அடிபட்டாலும்
கொடியை நழுவ விடாச்
சுதந்திர வீரர்களால்
அடையப் பெற்றதிது
கவசம் தூற்றும்
கருத்துச் சுதந்திரத்திற்காகவல்ல
ஒரு நம்பிக்கையினைப்
புறந் தள்ளி இகழ்ந்து
மலையேறும் பெண்ணியத்திற்கான
சுதந்திரத்திற்காகவல்ல
ஆடைச் சுதந்திரமென
அலங்கோலம் அரங்கேறும்
ஆர்ப்பாட்டத்திற்கான
சுதந்திரத்திற்காகவல்ல
சொந்த நாட்டை இகழ்ந்து
அந்நிய நாட்டைப் புகழும்
அநியாயங்களுக்கான
சுதந்திரத்திற்காகவல்ல.
மாதரை இழிவுசெய்யா
மனச் சுதந்திரம் பிற
மதங்களை இழிவுசெய்யா
மறச் சுதந்திரம்
மக்களை முடமாக்கா
மந்திரச் சுதந்திரம்
வாக்குகளை விலைபேசாச்
சுயதர்மச் சுதந்திரம்
எல்லோர்க்கும் இலவசம்
கல்வி, மருத்துவம் என்னும்
ஏகபோகச்
சமதர்மச்சுதந்திரம்
மூவர்ணக் கொடியாலே
முப்போகம் விளைவிக்கும்
இயற்கை முறை வளர்க்கும்
விவசாயச் சுதந்திரம்
எல்லாச் சுதந்திரமும்
இங்கே சுதந்திரமாய்
எல்லா மக்கட்கும்
வேண்டும்....வேண்டும்....
ஏனெனில்...
சும்மா வந்ததல்ல சுதந்திரம்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.