தூவி விதைத்துப் பூத்தவள்...
தனித்திருக்கும் பனித்துளியென
உடைந்து
நிதானிக்க முடியாது
வம்ப மாரியின் போக்கெனக்
கரைந்தோடுகின்றன நாட்கள்
பெரும் மரம் தன்னில்
சிறு காம்பில் தொங்கும்
காலத்தால்
கசப்பேறியப் பெரும் பழமென
பூங்கிளையற்றக் கொடூரங்களை
அறுத்தெறிய
துணை கோருகையில்
சைகை மொழியில் நிஜம்
தூரமாய் நிழல் தரித்துக்கொள்கிறது
இனி யாருடனும் விழிப்பற்று நடத்தல்
மழை நாளொன்றில்
காட்டாறு கடக்கும்
வாய்ப்பென ஆகுமென்றறிந்தவள்
வழிப் பாதையில்
வெயிலில் நனையும்
செடிகளைப் பார்த்து
யாழின் இயல்பென
புன்னகையை
வருவித்துக் கொள்கிறாள்
இனி அவள் வழிப் பாதை
எதுவாகிய போதும்
அவளாக கடந்து பழக மேகமாகிறாள்
காற்று மெல்ல
வாசம் சுமந்து கொள்கிறது
அவள்
நடையில் வேகம் கூடுகிறது
பாதையெங்கும் பிசிரற்ற ஈரம்
தூவி விதைத்து பூக்கிறாள்
புது விடியல்
ஒளி நெகிழ்வாய் சூடியபடி விரிகிறது
அவளது
பாதங்கள் குழைந்த
மண்ணைப் பூசிக்கொள்கின்றன
கருமை தொலைந்து
அவள்
மனம் கொண்டாட்டத்திற்கு
வண்ணமேற்றிக் கொள்கிறது
சாயங்களற்று
அந்தி செவ்வானம் சாரப்பெற்ற
மலை முகடனெ...
- இந்திரா அரசு, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.