கொடுத்து வைத்தவள்
சடசடவெனப் பேசுகிறாய் நீ
நானோ
கொஞ்சம் பொறு என்கிறேன்
நீயோ
கண்களை என் முகத்தின் மீது பூசி
யப்பா எத்தனை ஆண்டுகளாயிற்று
தேடியேத் தொலைந்தேன்
என்கிறாய்
யாரை என்கிறேன்
உம் கொட்டி
அடி வாங்காதே
கோபத்தில் நான்
என்கிறாய்
சரி விட்டுவிடவா
என்று கேட்டுக்கொண்டே
கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்
உயிர்ப்புடைய சிநேகம்
என் நரம்புகள் முழுவதுமாக
ஊடுருவி
என்னை இருபது ஆண்டுகள்
பின்னோக்கி இழுக்கிறது
பட்டாம் பூச்சியாய் இதயம்
நான் பார்க்காது தவறவிட்டவை
கவனிக்காது
இழந்தவைகளுள்
நீயே
பெரிதெனத் தெரிகிறாய்
நான்
அப்பொழுது யாசித்துக் கிடந்தது
ஒரு பிடிப் பிரியத்திற்காய் மட்டுமே
நீயோ
அப்பொழுது
அடம்பாய்ப் பிரியம் சுமந்த
யாசகனாய்
இயல்பாய்ப் பழகும் காலம்
இல்லையாகிவிட்ட சூழலில்
லாப நோக்கில் நட்பு கூட்டும்
நடப்பியல் உலகில்
பகையிருந்தும் பல்லைக் காட்டும்
பங்காளி மனிதர்கள்
நிறைந்த வெளியில்
நான் கொடுத்து வைத்தவள்தான்
காலவெளியில்
கையூட்டில்லா
உன் நட்பில்
இறக்கையின்றிப் பறப்பதனால்...
- இந்திரா அரசு, தஞ்சாவூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.