மேதினி இனம்
கல்லும் முள்ளாய்க் கிடந்த நிலங்கள்
கற்பகச் சோலையாய்
நெல்லும் கரும்பும் விளைந்து நின்றிடும்
நெடிய வயல்களாய்
இல்லம் அழகாய் மாளிகை வளமாய்
இருக்கும் நிலையிலே
உள்ளம் மகிழ ஆக்கிக் கொடுத்தவர்
உண்மைத் தொழிலாளி.
பள்ளம் மேடாய் இருந்த பாதைகள்
பளிங்குச் சாலைகளாய்
பார்ப்பவர் வியக்கும் உற்பத்திக் கூடம்
பலப்பல ஆலைகளாய்
கல்லில் உருவைக் காட்டும் கலைகள்
கண்முன் அற்புதமாய்
காட்டிக் கொடுத்தவர் கடின உழைப்பின்
அற்புதத் தொழிலாளி
கணினித் தொட்டுக் காவியம் செய்பவர்
இன்றைய தொழிலாளி
கணக்கு வழக்குப் பார்த்துச் சொல்பவர்
மன்றில் அறிவேந்தி
புனிதமானது தொழில்தான் இதனைப்
புரிபவன் அறிவாளி
போற்றி வாழ்த்திப் புத்துல கமைப்போம்
இந்நாள் தினம் நாமே!
- கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.