இல்லை... இப்போது...!
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்று விட்டேன்!!
விரித்தப் படுக்கை விரிப்பில்
கசங்கல் இல்லை இப்போது...
அங்கும் இங்கும் சிதறிக்கிடக்கும்
துணிகளும் இல்லை இப்போது...
ரிமோட்டுக்கான சண்டை
ஏதும் இல்லை இப்போது...
புதிய புதிய உணவுகேட்டு
ஆர்ப்பாட்டமும் இல்லை இப்போது...
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!
காலையில் வாசலில் விழும்
செய்தித் தாளுக்கு அடிதடி
இல்லை இப்போது...
வீடேப் பெரிதாய் விசாலமாய்
தோன்றுகிறது இப்போது...
ஆனாலும் எந்த அறையிலும்
உயிரோட்டம் இல்லை இப்போது...
நகர்த்தினாலும் நகர மறுக்குது
நேரம் இப்போது...
குழந்தைப் பருவ நினைவு
படமாய்ச் சுவரில் தொங்குது இப்போது...
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில்* *நின்றுவிட்டேன்!!
முதுகில் சாய்ந்து யாரும் கழுத்தை
கட்டுவதில்லை இப்போது...
குதிரை ஏறி சவாரி செய்ய
முதுகை வளைக்கும்
வேலையில்லை இப்போது...
உணவு ஊட்ட நிலாவும்
வேண்டியதில்லை இப்போது...
உணவு ஊட்டியபின் மனதில்
தோன்றும் ஆனந்தமும்
இல்லை இப்போது...
தினமும் வரும் விவாத
விளக்கத்திற்கு
வாய்ப்பில்லை இப்போது...
போடும் சண்டையை
விலக்கிடும் ஆனந்தமும்
இல்லை இப்போது...
மகிழ்ச்சியில் கிடைக்கும்
அன்பு முத்தமும்
இங்கே இல்லை இப்போது...
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!
கண் இமைப்பதற்குள்
வாழ்வின் பொற்காலம்
ஓடித்தான் போனது...
அழகான அந்த வசந்தம்
எப்போது கரைந்ததோ...?
மழலை மொழியில்
வழிந்த ஆனந்தம்
நொடிச் சிரிப்பும் அழுகையும்
முதுகில் தட்டித் தந்து
மடியில் கிடத்தித் தோளில்
சாய்த்துத் தாலாட்டு பாடி
தூங்கச் செய்து அடிக்கடி
விழித்துக் கலைந்த போர்வை
சீராய்க் போர்த்திய காலமும்
வேலையும் இல்லை இப்போது...
படுக்கும் கட்டிலும் விசாலமாய்
தோன்றுது இப்போது...
அன்புக் குழந்தைகளின்
இனிய குழந்தைப் பருவம்
எங்கோ தொலைந்து விட்டது...
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!
தன் காலுறையை எவரும்
அங்கும் இங்குமாய்
எறிவதில்லை இப்போது...
குளிர்பதனப் பெட்டியும் சூன்யமாய்
வீடுபோல் நிற்கிறது...
குளியலறையும் ஈரமில்லாமல்
உலர்ந்து கிடக்கிறது இப்போது...
சமையலறையோ அமைதி
மண்டிக் கிடக்கிறது இப்போது...
காலை மாலை தவறாமல்
உடல்நலம் பற்றி
அலைபேசியில் விசாரிப்பு
நான் ஓய்வுடன் நலம் பேண
ஆயிரம் அறிவுரை
தருகிறார்கள் இப்போது...
அன்று நான் அவர்களின்
சண்டை விலக்கி வைத்தேன்
இன்று அவர்கள் எனக்கு
அறிவுரை சொல்கிறார்கள்.
நான் குழந்தையாகி
விட்டதை
உணர்கிறேன் இப்போது...
என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர்
நான் தனிமையில் நின்றுவிட்டேன்!!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.