சக்கரம்தான் வாழ்க்கை
சக்கரம்தான் வாழ்க்கையிங்கே சுழலுகின்ற
சக்கரம்போல் இரவுபகல் வந்துபோகும்
அக்காலம்தொட்டு நம்மின் வாழ்க்கை தன்னில்
அதுபோன்றே இன்பதுன்பம் கலந்திருக்கும் !
முக்காலம் உணர்கின்ற முனிவர்கூட
முனிவுகொண்டு துன்பத்தைக் கொடுக்கின்றார்கள்
தக்கபடி அதுபோக்கும் வழியும்கூறித்
தருகின்றார் இன்பத்தை மனம் குளிர்ந்தே !
துன்பமொன்றே வாழ்க்கையெனில் சோர்வே மிஞ்சும்
துயரமின்றி இன்பமெனில் சலிப்பே விஞ்சும்
இன்னலையும் இன்பமென ஏற்றுக் கொண்டால்
இனிதாகும் வாழ்க்கையிங்கே விரக்தி வாரா !
அன்பான அன்னையுமே குழந்தை தன்னை
அடிப்பதெல்லாம் நல்லொழுக்கம் கற்பதற்கே
துன்பமிங்கே வருவதுவும் வாழ்க்கை தன்னை
தூய்மையாக்கி நல்வழியில் செலுத்துதற்கே !
கதிரொளியின் அருமையினைக்கங்குல் காட்டும்
காண்கின்ற இன்பத்தின் அருமைதன்னை
மிதிக்கின்ற துன்பம்தான் எடுத்துக்காட்டும்
மீள்வோர்க்கோ இன்பதுன்பம் சமமாய்த் தோன்றும் !
புதிதன்று தூங்குவது போல்தான் துன்பம்
புலர்காலை எழுவதுதான் இன்பமாகும்
புதிராக மாறிவரும் இன்ப துன்பை
புரிந்து கொண்டால் வெற்றியுடன் வாழ்வர் நன்றே !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.