ஐவகை மங்கையர்
நானே உயர்நதவள்
தானே வளர் மலைகள்
பாலருவிகள்
வெண்முகில் கூட்டம்
என்னிடமே உண்டு என்றாள்
குறிஞ்சி மங்கை
பச்சை மர ஆபரணங்கள்
எனது தோரணங்கள்
கானகப் பறவைகள்
யானைகள் வாழும்
முல்லைப் பெண்
எல்லையிலாச் சிறப்புடையவள்
என்றாள்.
நாற்றுகள்
தலை சாய்த்து
வரப்பில் உறங்க
ஏற்ற நீர்
எங்கும் பாய
சோறு தரும்
மருத மங்கை
அருஞ் சிறப்புடையவள்
என்றாள்.
வெள்ளலைக் கரங்கள் நீட்டி
நல்முத்து தரும் நான்
நானிலத்தில் சிறந்தவள்
மீனுணவு
வயிறு நிறைப்பேன் என்றாள்
பொய்யில்லாமல்
நெய்தல் பெண்.
சுடும் பாலை
கடும் வெப்பம் நான்
என் வெப்பம் நீர் உறிஞ்சும்
வான் மழை காரணம் என்றாள்
பாலை மகள்
அவ்வழி வந்த
அழகு தமிழ் மங்கை
ஆரணங்குகள் ஐவரும்
போரிட வேண்டாம்
குறிஞ்சி எனது
கார் குழல் கீரிடம்
முல்லையோர் ஆரம்
மருதம் இடை தழுவும் ஒட்டியாணம்
நெய்தல் கை வளையல்
பாலை பாத சிலம்பென
அகமகிழ பகர்ந்தனள்
தமிழ் மங்கை
- கடலூர் சுந்தரராஜன், சென்னை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.