சிவப்புப் பெண்
என் மேலாடை கழற்றுவதில் காட்டிடும் மென்மையை
கீழாடை கழட்டுவதில் காட்டுவதில்லை யாரும்
கழுத்துப்பகுதியில் மெல்ல பற்றி
வலது கரத்தில் இடுப்பைப் பிடித்து
இடது கரத்தில் கழுத்தை
லாவகமாய்ச் சுற்றி
என்னைப் பிரிக்க முயல்கிறீர்
உங்களுக்கு நான் உடன்படாத போது
பற் தடம் பதியுமளவு
சற்று இறுக்கிக் கடித்து என்னைப் பிரிக்கிறீர்
சிலர் மழை நின்ற மரத்தின்
இலை வடிநீராக இறக்குகிறீர்கள்
என்னுள் உங்கள் திரவத்தை
வேறு சிலரோ கொட்டும் புனலாய்
என் மேல் கொட்டி
உள்ளும் புறமும் வழியவிட்டு
அழுக்குப்படுத்தி அசிங்கப்படுத்துகிறீர்கள்
பணி முடிந்தவுடன்
என் கழுத்தை மட்டும்
உடலோடு இணைத்துவிட்டு
மேலாடை மூடாமலே
சென்று விடுகிறீர்கள்
திறந்திருக்கும் என் முக்கோண முகப்பின்
நடுவாசலின் நடுகீறலின்
மையப்புள்ளியிலிருந்து
கசிந்து கொண்டே இருக்கிறது
சிவப்பு திரவம்
ஆனாலும் நீங்கள் வெட்கப்படவில்லை
அந்த அவமானத்தில்
தலைகுப்புறப் படுக்கிறேன் நான்
இனிமேலேனும் உங்கள் பணி
முடிந்தாலும் மேலாடை மூடிப் போங்கள்
இப்படிக்கு;
சிவப்புப்பெண் (Red Pen)
- நேசமுடன் ஈசு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.