காளியாக மாறவேண்டும்
பெண்களினைத் தெய்வமெனப் போற்றுகின்றார்
பெண்பெயரை நதிகளுக்குச் சூட்டுகின்றார்
பெண்பிறந்தால் இலக்குமியே வந்தாலென்று
பெருமகிழ்வில் முத்தமிட்டுக் கொஞ்சுகின்றார் !
கண்ணென்றும் வீட்டிற்கு விளக்காம்என்றும்
கட்டிவந்த மருமகளைப் புகழுகின்றார்
மண்தன்னைத் தாய்மண்ணாய் வணங்குவோர்தாம்
மங்கையரை நுகர்பொருளாய் எண்ணுகின்றார் !
தெருவினிலே தனியாக ஒருபெண் சென்றால்
தெய்வத்தைக் கணிகையெனக் காணுகின்றார்
அருவருப்பாய்ப் பேருந்தில் உரசுகின்றார்
அருங்கோயில் கூட்டத்தில் நெருக்குகின்றார் !
பருவம்தான் வரும்முன்னே மொட்டைக்கூடப்
பாலியலின் வன்முறையில் கசக்குகின்றார்
உருவம்தான் பெண்போல இருந்தால் போதும்
உன்மத்தம் தலைக்கேற விலங்காகின்றார் !
ஆட்சியராய் இருந்தாலும் விடுவதில்லை
அலுவலகம் என்றாலும் காப்புமில்லை
காட்சிதரும் பெண்தெய்வக் கையிலுள்ள
கருவியெல்லாம் சம்காரம் செய்வதற்கே !
மாட்சியுடன் பெண்மையினைக் காத்துக்கொள்ள
மகளிரெல்லாம் காளியாக மாறவேண்டும்
நாட்டினிலே பெண்வதைக்கும் கயமைகட்கு
நடுத்தெருவில் அவனுறுப்பை அறுக்கவேண்டும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.