மைதானம்
இருள் விலகாத
விடியலில்...
விருவிருப்படைய ஆரம்பிக்கிறது...
மைதானம்!
தினம் ...
வருகைப்பதிவேடாய்...
பாதங்கள்...
அழுத்தியும்
அழுத்தாமலும்...
நடந்தும் ஓடியும்
தடங்களால் கையெழுத்திடுகிறது!
மைதானத்தில்...
வானம் மழையில்
நனைக்காத வரை...
மைதானத்தை வியர்வைகள்
நனைத்துப்பார்க்க...
ஆசைப்படுகிறது!
வயது வித்தியாசம் இல்லாமல்...
உடம்பு வம்புக்கு இழுக்கிறது வாலிபத்தை!
தெம்பு தொடர நடக்கும்
காலை நடையில் வீம்பு பேச்சும் பயணிக்கிறது!
பந்தயக் குதிரைகள்
மத்தியில் பந்தாக் குதிரைகளும்
ஓடுகின்றன!
காலத்தைப் போக்க அல்ல
எதிர்காலத்தை காக்கவே...
பயிற்சிகளின் முயற்சி...
பல நிலைகளில்!
மருந்துப் பட்டியலைக் குறைத்து
விருந்துப் பட்டியலை அதிகரிக்கும்
வித்தையை மைதானம் காத்து வைத்திருக்கிறது!
அத்தனை ஆசைகளையும்
ஆயுள்வரை இருத்திப்பிடிக்க...
மைதானத்தில் ...
அழுத்தியே கையெழுத்திடுகிறது
பாதங்கள் தினம்... தினம்...
போதிமரத்தின் தன்மையை
தனிமை நடை உணர்த்தும்...
தினசரி நடை நம்மையே உயர்த்தும்
பார்வையாளனாய்...
நுழைந்து பாருங்கள்...
உங்கள் பாதமும்
கையெழுத்திட ஆசைப்படும்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.