தமிழ் வாழ்த்து
ஆதியின் மொழியாய்
அமுதமே சுவையாய்
அகிலமே நடந்திடும் வழியாய்
அருந்தமிழானாய்
அனைவரின் விழியாய்
அழகுறச் செய்மொழி வாழி
ஓதிட எளிதாய்
உணர்ந்திடப் புதிதாய்
ஊனொடு கலந்ததோ ருயிராய்
உலகினில் பிறந்த
உயர்மொழிக் கெல்லாம்
உயர்தமிழ் தலைமொழி வாழி
பாதியில் எழுந்த
பலமொழிக் கெல்லாம்
பகர்பொருள் தந்தவள் நீயே
பனையென வளர்ந்து
பலபயன் அளித்த
பைந்தமிழ் மொழியெனுந் தாயே
நீதியின் மொழியாய்
நிறைகுறள் மொழிந்தாய்
நின்றிடும் காலமும்
நிறைவாய்
நிலைத்திடும் விதமாய்
நிதமொரு புதிதாய் நேரினில் தருமொழி வாழி
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.