எதிர்ப்புச் சக்தி பெருக்குவோம்
ஒரு நெடும் பயணத்தின்
தடைக்கல்லாய், இந்தத்
தீநுண் கிருமி
முகநூல் திறந்தால்
இறந்தவர்களின்
முகங்களெனப் பதிவு
புலனந் திறந்தால்
நேற்றுப் பதிவிட்டவர்
இன்றில்லையெனும் முடிவு
இயற்கை தொடுத்த சமர்
எதிர்த்து நின்று போராட
அரசு அறிவுரை அறவுரை
ஆயுதங்களாய்
முகக்கவசங்கள் ஊரடங்கு
கைகழுவுதல் சமூக இடைவெளி
வீட்டிற்குள் பதுங்கியிருந்து
எதிரியின் பாய்ச்சலைத் தடுத்து,
போராடப் பழக்கும் அரசாங்கம்
குறைந்தபட்ச மரியாதையின்றி
இறப்போரின்
இறுதி முடிவு
வாழ்வென்றால் போர்க்களமாம்
முகந் தெரியாச் சத்துருவுடன்
முடிவில்லாப் போராட்டம்
எதிர்ப்புச்சக்தியைக் கூட்டுவதே
நல்லதாம், உடலில் உயிர் தங்க
நோயெதிர்ப்புச் சக்தி பெருக்குவோம்.
- டி. எச். லோகவதி, மதுரை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.