வைராக்கியம்
மாடி வீடு கட்டணும்னு
கோடி கனவோடு வந்தேனுங்க
ராஜாவீட்டு கன்னுக்குட்டி
கூஜாவாகி ஒரு கட்டில்
தொழுவத்தில் அடைந்ததென்ன ?
ருசியா சோத்துல குழம்பை ஊத்தி,
திண்ணவாயி
பசியில குபூஸ்ஸதான் முழுங்குதய்யா.
ஷேக்கு நாட்டு மணல் நகரம்
ஷோக்காதான் இருக்குதப்பா
எட்டுத்திக்கும் சுத்தி நிக்கும்
ஒட்டகத்தைப் பாலையில் மேய்க்கயில
அடிச்ச மண்ணு காற்றினிலே
எங்களுக்கும் எதுவும்தான் தெரியலியே
விடிந்து இருட்டும் பொழுதினிலே
உன்நெனப்பு வாட்டுதம்மா
வெட்டிப்பய பேரைத்தான்
மாத்தாதான் நிக்குறேண்டி
வீராப்பா ஒரு நாளு
உன்புருஷன் நான்தான்னு
கவுரதையா சொல்லுவேடி
கைகொட்டிச் சிரிச்சச் சொந்தம் - ஒருநாளு
காசு பணம் வந்ததுமே
வாய்பொத்தி பொறுமுமடி
சின்னபுள்ள, செவத்தபுள்ள
நம்பிக்கையை விட்டிடாதே
கஷ்டப்பட்டாலும்
இஷ்டப்பட்டு
உனக்காக உழைப்பேன்டி
சத்தியமாச் சொல்லுறேன்
சாதிச்சிட்டு வருவேன்டி
ராசாத்தி உன்னதான்
ராணி போல ஆக்குவேன்டி
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.