பொங்கலிடு! பொங்கலிடு!
பொங்கலிடு பொங்கலிடு புதுமைகளைப் பொங்கவிடு
பொங்கிவரும் தைத்திருநாள் புதுவழியைப் பிறக்கவிடு
செங்கதிரோன் விளைத்திட்ட சீர்களுக்கு நன்றிசொலு.
செங்கரும்பின் இனிப்பெனவே சிறக்கட்டும் வாழ்க்கையது
புதுப்பானை பொங்கலிடப் புத்தரிசிச் சேர்த்துவிடு
புதுவெல்லத் தித்திப்பைப் புன்னகையில் கோர்த்துவிடு
புதுவாழ்வு பெற்றுவிடு போம்கவலை தீர்த்துவிடு
புதுப்பாதை உழவர்க்காய்ப் போராடிப் பார்த்துவிடு
மஞ்சளென வயல்வாழ்வு மங்களமாய் மாறட்டும்
கெஞ்சுகின்ற நிலைமாற்றி கேள்விக்களம் ஏறட்டும்
மிஞ்சுகின்ற மாந்தரெலாம் விடியலினைக் காணட்டும்
நஞ்சாகும் விவசாய நடைமாறிப் பேணட்டும்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.