பொங்கக் கவிதை
அறுவடை முடிந்து சற்றே கண்
அசந்திருந்த நேரம்,
வரும் கனவில் கூட வந்து நிற்பவன்
கடன்காரன்
வட்டியும் அசலுமாய்
விளைச்சலை அள்ளிக் கொண்டவன்
அசலில் இன்னும்
மீதமிருக்கும் ,
அடுத்த போகத்தில்
அடைத்து விடு என்பான்
உழுதவன் கணக்கில்
உழக்களவும் மிஞ்சாமல்
இருப்பதைக் கொண்டு
எழுந்து வரும் சூரியனுக்கு
பொங்கல் படைத்தவன் மனமார வேண்டுவான்
அடுத்த தையிலாவது
எம் பொண்ணுக்கு ஒரு
நல்லவழி பிறக்க வைப்பா
இந்த வேண்டுதல்
ஆண்டு தோறும் தொடரும்
அவலத்தை நினைத்தால் தான்
பொங்கவைக்க வேண்டும்
என்றேனும் ஒருநாள்
என்று தான் எழுதுகிறது
இக்கவிதை.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.