தாய்மொழி
கல் தோன்றா,
மண் தோன்றாக் காலத்தே
வரலாறு உதிக்கும் முன்
உருவான ஆதிமொழி
என் தாய்மொழி - அம்மொழி
எம் தமிழ்மொழி!
தமிழ் மொழியைத் தாய்ப்பாலாய்
உன் ஒவ்வொரு சந்ததிக்கும் ஊட்டு.
எல்லா மொழியும் கற்று
உலகம் சுற்று
திரவியம் தேடு
பொருளாதாரம் கூட்டு
முப்பொழுதும்
உன் உயிர்மொழியை
உணர்வுகளிலும், உதடுகளிலும்
குருதியாய் ஓடவிடு.
யாதும் ஊரே
யாவரும் கேளிர் என்று சொன்ன போதிலும்
யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழி போல்
இனியாவது எங்கும் காணோம் என
மகாகவி பாரதி போலச்
சொல்ல மறக்காதே.
சாதி என்னும் சாக்கடை
தெருவெல்லாம் ஓடிய போதும்,
மதமென்னும் சாத்தான்
நம்மை ஆட்டிவித்த போதிலும்,
பணம், கெளரவம் வைத்து
குரங்கு மனம்
மரம் தாவும் போதும்
ஏழை, பணக்காரன் என்ற
எந்த ஏற்றத்தாழ்வும்
மேடு பள்ளமாய்
வந்த போதிலும்,
உன்னையும், என்னையும் இணைப்பது
தாய்மொழி அதுவே
நம் தமிழ்மொழி!
உறங்கும்போது கூட
தமிழர் என்பதை மறந்து விடாதே.
வந்தவன், போனவன் எல்லாம்
வகுத்த வேதம், மதம், கடவுள்
இங்கு நம்மை எதுவும் செய்துவிடாது.
வேற்றுமை வந்த போதிலும்
நாமெல்லாம் தமிழர்தான்
ஒருபோதும் எவனுக்காகவும், எதுக்காகவும்
உயிர் தாய்மொழி தமிழை விட்டுவிடாதே !!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.