எங்கட பையன்

அகதி முகாம் அது...
கதியற்று காலமெல்லாம் எப்படி வாழ்கிறார்களோ...
என்ற கரிசனம் மேவிட
கண்டு தெளிவோம் என்றொரு நாள்
நண்பர்களுடன் கடந்து சென்றான் அவன்...
அகதி முகாம் எனும் பலகை அழிக்கப்பட்டு
ஏதிலியர்களாய் இன்முகத்துடன் வரவேற்றனர்...
கதியற்ற போதும் தமிழைக் கைவிடாதவர்களை
கைவிட்டதென்னவோ தமிழும்தானே
எனும் எண்ணத்தை மாற்றிட
ஏதேனும் வாங்கலாமே...
அவனது பார்வை
பெட்டிக்கடையில் தொங்கிய பாண் எனும் பண்டத்தில் பதிந்தது...
இணை உணவொன்று இருப்பது தெரியாமல்
ஆசையாய் வாங்கினான்...
எதிரிலோ இடியாப்ப விற்பனை இனிதாய் நடந்தது...
பாணுக்கு கொஞ்சம் பக்க உணவு கிடைக்குமா என்றான்...
இடியாப்பமும் வாங்கினால் எளிதில் கிடைக்கும்
என்றார் அந்த ஈழத்து அம்மா...
இடியாப்பச் சிக்கலை எதிர்கொள்ள
வேறு என்ன உள்ளதென்றான்...
உனக்குத் தர ஒன்றுமில்லை
என்றாள் உறுதியான குரலிலே...
பாத்திரத்தில் என்னதான் இருக்குமோ
என்ற அவனது பார்வை
பட்டதென்னவோ அந்த பாத்திரத்தில்...
சம்பலோ என்றான் சத்தமாக...
சட்டென்று வெளியே
வந்தவள் சடுதியில்
கைபிடித்து நீ எங்கட பையனா என்றாள்...
இதயமும் இனிக்க...
பை நிறைய கட்டிக் கொடுத்து விட்டு
காசு வேண்டாம் தம்பி...
நமக்கும் காலம் வரும் என்றாள்...
கண் கலங்க...
- செ. துரைமுருகன், கோயம்புத்தூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.