கைகட்டி நிற்றல் நன்றோ!
கொள்கையற்ற அரசியலை நடத்து வோர்கள்
கொள்ளையர்கள் எனப்பிடித்தே தண்டிக் காமல்
அள்ளியவர் நாடுதனைச் சுருட்டு தற்கே
ஆட்சிதந்து முட்டாளாய் நிற்றல் நன்றோ !
உள்ளத்தில் நேர்மையின்றி வணிகம் செய்வோர்
ஊர்திருடர் எனக்கட்டி உதைத்தி டாமல்
கள்ளத்தை வளர்ப்பதினைப் பார்த்துக் கொண்டு
கயவராகக் கைகட்டி நிற்றல் நன்றோ!
தொண்டுள்ளம் இல்லாதார் கல்விக் கூடம்
தொடங்குவதைக் கண்டித்துத் தடுத்தி டாமல்
கண்முன்னே வியாபாரம் செய்யக் கண்டும்
கண்மூடி வாய்பொத்தி நிற்றல் நன்றோ !
பண்பாடு நாகரிகம் பறக்க விட்டுப்
பாதைமாறும் இளைஞர்க்கு வழிகாட் டாமல்
எண்ணியவா றவர்நடக்க விட்டு விட்டே
ஏக்கமுடம் மனம்பதறி நிற்றல் நன்றோ !
மனிதத்தை மாய்க்கின்ற விஞ்ஞா னத்தின்
மாவழிவை எச்சரிக்க முனைந்தி டாமல்
தனிமனித சாதனைக்காய் தம்மி னத்தின்
தலைகொய்ய வாள்கொடுத்து நிற்றல் நன்றோ!
குனிவதனால் முதுகினிலே ஏற விட்டுக்
குட்டுகின்றார் தலையிலெனப் புலம்பி டாமல்
இனியிங்கே மாற்றந்தான் நிகழ்வ தற்கே
இணைந்தொன்றாய் நிமிர்ந்தெழுவோம் மாறும் எல்லாம்!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.