ஓர் காதல் கடிதம்!
கானல் வரியில் உமக்குத் தீட்டிய ஓர் காதல் கடிதம்!
மனத்திலே அஞ்சலிட்டேன்! வந்திருக்கும் இந்நேரம்!!
கண்ணிற்குப் புலனாகா எழுத்துகள் அதிலிருக்கும்!
புறக்கண்ணைப் புறக்கணித்துவிட்டு அகக்கண்ணில் பாரேன்!
புலப்படும் என் இதயம்!
கேள்விக்குறியாய் உழலும் நான் ஏற்றிய
ஆச்சரியக்குறிகள் ஆங்காங்கே நெடிந்து நிற்கும்!
அவை எம்மிடம் நும்மை திசைகாட்டும்!
இதயத்தின் பிழிவினில் உண்டாகும் குருதியை
வழிந்தோட அனுமதியாமல்,
என் நாளங்களைத் தட்டிவிட்டுப்
பேனாவின் சேமிப்பகத்தில் சிறையிலிட்டேன்!
கறைபடிந்த பேனாவின் முனைகொண்டு
அக்கடிதந்தனில் வெள்ளமென வந்துவிழும்
வார்த்தைகள்! அள்ளி மொழிந்தேன்..!!!
காகிதமோ கிள்ளக் கொள்ளத்தான் அனுமதித்தான்!
வெண்ணிலவோ! சோர்ந்துவிடப் பகலவனைத் துணைக்கழைக்கும்
கூடல் நேரமும் கூடியது! ஆனால்,
காகிதமோ என்னிடம் சேராது ஊடியது!
கண் துஞ்சாது மெய்ப்பிணி பாராது
கொசுக்கடிகளை வெகுமனாய்ப் பரிசில்பெற்று
இரவு முழுதும் ஆண்டு அரங்கேற்றினேன் இக்கடிதத்தை!
விரைவாகப் படித்துவிடு! இன்றேல்,
மெல்ல மெல்ல எழுத்துகள் மறைந்துபோகும்!
உனக்குச் சொந்தமான என் உள்ளத்துடனே...!
- ஜெ. கார்த்திக், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.