ஏக்கம்...
வைத்த விழி விலகாமல்
ஏக்கத்துடன் என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அவன் பார்ப்பதை
நான் பார்த்தபடி இருக்கிறேன்.
நான் அவனைப் பார்த்துக்
கொண்டிருப்பது தெரிந்தும்
என்னையேப் பார்த்துக்
கொண்டிருக்கிறான்.
அவன் ஏக்கம் புரிந்து விட்டது
நான் புரிந்து கொண்டதை
அவன் தெரிந்து கொண்ட
பின்னரும் அதே பார்வையில்
அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நான் சாப்பிடும்
உணவிலிருந்து கருணையோடு
அவனுக்குத் தருகிறேன்.
அவசரத்தில் விக்கித் தவிக்கும்
அவன் தொண்டைக்குழிக்கு
தண்ணீரையும் பாசத்தோடு
பருகத் தருகிறேன்.
குடித்து முடித்தவன் நீண்டதொரு
ஏப்பம் எடுக்கிறான்.
இப்போதும் அவன்
பார்த்துக் கொண்டிருக்கிறான்
என்னை.
முதல் பார்வையிலிருந்த
பசியின் ஏக்கம்
அவனில் அறவேக்
காணாமல் போயிருந்தது.
அதில் நிறைவாய்
நன்றியும் அன்பும்
நிறையவேக் கலந்திருக்கிறது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.