மயிலிறகு மட்டும்
உனக்குப் பிடித்த
கவிதையின் பக்கத்தைக் கொண்ட
ஒரு புத்தகத்தில்
உன்னை ஞாபகப்படுத்தும்
மயிலிறகு ஒன்றை
அடையாளமாக வைத்து
அடிக்கடி
பிரித்துப் பார்த்து
படித்துப் பார்த்து
எனக்குள் நானே இரசிக்கிறேன்...
எத்தனைமுறை படித்தாலும்
ஏனோ சலிக்கவேயில்லை...
உன்னமுத காதலைப் போல...
அன்றாடம்
என்ன நிகழ்ந்தாலும்
படிப்பதை நிறுத்தவில்லை...
ஒரு நாள்
மாலைப் பொழுது
மண் குளிரும்படியான
ஜோரான மழை
வெளியே சென்ற நான்
வேறு வழியில்லாமல்
நனைந்து கொண்டே
வீட்டினுள் சென்றேன்
உடல் நனைந்திருந்தாலும்
தலை துவட்டத்
துண்டைத் தேடாமல்
கவிதை தேடி
புத்தகத்தைத் திறந்தேன்
ஏனோ புத்தகத்திலுள்ள
கவிதையைக் காணவில்லை - ஆனால்
நான் வைத்த மயிலிறகு மட்டும்
மயிலாய் மாறி
காதல் மழையில்
நிற்காமல் ஆடிக் கொண்டிருந்தது!!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.