உனக்குள் ஒரு நண்பன்
நினைத்த வாழ்க்கை
அனைவருக்கும்
எளிதில் அமைவதில்லை
கிடைத்த வாழ்வை
ரசித்து வாழ்ந்தால்
என்றும் துன்பமில்லை
விருப்பம் எல்லாம் ஒருநாள்
வெறுப்பாய் மாறிவிடும்
வெறுப்பும் உன்னை ஒருநாள்
விரும்பிடும் காலம் வரும்
மாறாதது ஒன்றே
மாற்றம் அது நன்றே
காயங்கள் யாவும்
கண்ணீரில் ஆறும்
கலங்கி நின்றால்
காலங்கள் தீரும்
தத்தளிக்கும் கப்பல்
கரைசேரும் போது
விழித்திரு(ற)க்கும் விழிகளுக்கு
புதுவிடியல் பிறக்காதா?
தோல்வி உந்தன் வாழ்வில்
துயில்கொண்டு இருந்தாலும்
விடாமுயற்சி என்ற வில்லெய்தி
தோல்வியை விரட்டிட இயலாதா?
வெற்றி மட்டும் இலக்கு என்றால்
தோல்விக்கு இங்கு இடமில்லையே!
தோல்வி இல்லா வெற்றி என்றும்
தரணியில் நிலைத்தது இல்லையே!
உன் கையே நம்பிக்கை
அதுவே உன் வாழ்க்கை
யாரும் வந்து உனக்கு
வழிநடத்த இயலாது
இயந்திர வாழ்க்கையில் இதயமும்
இடறித் தானே துடிக்கிறது
உதவிட யாருமில்லை என
ஒருபோதும் கலங்காதே!
உனக்குள் ஒரு நண்பன்
இருக்கின்றான் என்றும் மறவாதே!
- சரவிபி ரோசிசந்திரா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.