எப்போது உடையுமென்று...?

காலை எழுந்தவுடன் கார்காலப்பனியிலும்
கண்ணைத் துடைத்துக்கிட்டு கல்லில் இடர்பாட்டுப்
பற்பசையைத் தூரிகையில் பிதுக்கி வைத்து
பல் துலக்கிய நினைவுகள்-
எல்லாம் உன் மடி வந்து சேரத்தான் - இப்போது
நாங்கள் ஆதரவற்ற மனிதராய்
சிறைப்பட்ட வாழ்க்கையாய் - வீட்டில்
தினம் தினம் பார்த்த கண்கள் - இப்போது
திரை போட்டு உன்னைப் பூட்டி வைத்தார்கள்
பள்ளிக்கூடமே...
உன்னிடம் அனுதினம் அடைக்கலம் தேடிவரும்
மாணவச் செல்வங்கள், வெள்ளை உடை தரித்த
சமாதான புறாக்கள் விளையாடிய -
உன் முற்றம் இப்போ வெறிச்சோடிக் கிடக்கிறது
துன்பங்களைத் துயரங்களை நாம்
யாரிடம்தான் சொல்வோம்
சோதனையைச் சொல்லிவிட - சொந்தங்களும் இல்லை.
முற்றத்தின் ஒரு பகுதியில் சுற்றிச் சுழலும்
இராட்டினமும், ஊஞ்சலும், கம்பி கோபுரமும்
உன்னை அடைத்ததனால் எல்லாம்
துருப்பிடித்த நிலையில்...
வாயில் படர்கையைத் திறந்தால்
சிரித்த முகத்துடன் வரவேற்கும்
பள்ளியின் நந்தவனத்தில் மலர்ந்த
பூக்கள் மணம் வீசப்
பெரிய மரங்கள் எல்லாம் கரமசைத்து
வரவேற்ற நாட்கள் எல்லாம் மறந்து போச்சு
உன்னைத் தனிமைப்படுத்தல் என் பார்வையில்
சின்னச் சின்ன மழலைகள் எல்லோரும்
உயிரும் மெய்யும் எழுதிய மணல் முற்றத்தில்
இப்போது சருகுகளும் புற்களும் படர்ந்திட
விசஜந்துக்கள் வாழும் இடமாக
மறிவிட்டது எம் பள்ளிக் கூட முற்றம்...
மாணவச் செல்வங்கள் இருந்து படித்த
கதிரைகளும் வங்குகளும் இப்போது,
குருவிகளும் சிலந்திகளும் குளவிகளும்
வாழும் இடமாக போச்சு...
கண்ணும் கருத்துமாய்
மழை போலத் தண்ணீர் - தூவி
கண்ணே கண்ணே என்று வளர்த்த
பூத்துமலர்ந்த பூஞ் செடியெல்லாம்
சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மையால்
மரணமுற்றுக் கிடக்கிறது.
பள்ளிக்கூடமே பள்ளிக்கூடமே
உன்னைத் தனிமைப்படுத்தியதனால்.
எப்போது உன்னைப் பார்க்கும்
பாக்கியம் கிடைக்குமென்று
தவியாய்த் தவிக்கின்றோம்
திரை போட்டுப் பூட்டிய விலங்கு
எப்போது உடையுமென்று...?
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.