பாக்கி
உருகி எங்கோ ஓடுகின்றனவே
என்னுள் மீதம் உள்ளவை எல்லாம்!
பற்றி நிற்கவும் வலுவிலா
என் எஞ்சிய நாளங்கள்!
உழைப்புக்கு வியர்வையைப்
பிழிந்தளித்துத் தோய்ந்த
உள்ளெலும்புக் குவியல்கள்!
விலகி எல்லாம் மெலிதாய் இலகி
சுருக்கங்களின் போர்வையில்
போர்த்தப்பட்ட மேனி!
எண்பது எண்பத்தைந்து என
ஐந்தாண்டுத் திட்டங்கள் போல்
அகைவைகள் எகிறிவிட்டன!
ஐம்பதாண்டு காதில் போட்டுவைத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றாத
ஐயனாரு சாமியின் விபூதியைக் கைக்குள்
இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன்!
முதுமைக் காற்று வேகமாக உரச உரச
கையிலுள்ள அனைத்தும் பறிபோய்விட்டன.
முதியோர் தொகை மட்டும் இன்னும் பாக்கி!
- ஜெ. கார்த்திக், திருச்சிராப்பள்ளி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.