நோய்களில்லா உலகைப் படைப்போம்
முன்பிங்கே எத்தனையோ கொள்ளை நோய்கள்
முன்னோரின் உயிர்களினைப் பறித்த தென்றார்
என்புருக்கி நோயென்றார் பிளேக்காம் என்றார்
எடுத்துரைக்க அஞ்சுகின்ற காலரா என்றார்
வன்முறையில் குண்டுகட்குப் பலியா னார்போல்
வரிசையாக வீட்டிற்குள் சுருண்டு வீழ்ந்தார்
முன்பின்னே அறிந்தவர்கள் அறியார் என்றே
முச்சந்தி வீதியெல்லாம் பிணக்குவி யல்கள் !
அறிவியல்தாம் வளராத காலம் தன்னில்
அதிகமாகப் படிப்பறிவு இல்லாப் போதில்
அறிவுரைகள் சொல்லிவழி காட்டு தற்கும்
அதைப்பற்றி விழிப்புணர்வு ஊட்டு தற்கும்
அறிவுறுத்த தொலைக்காட்சி செய்தித் தாள்கள்
அலைப்பேசி தொலைப்பேசி இல்லாப் போதும்
குறிக்கோளாய் முன்னோர்கள் சொல்லி வைத்த
குலவழக்கம் பின்பற்றி நோயை வென்றார் !
கொல்லுகின்ற நுண்ணுயிரி வந்த தென்று
கோடிமக்கள் அஞ்சியின்றோ அலறு கின்றோம்
வெல்லுதற்கு வழியிங்கே இருக்கும் போது
வேதனையில் வீட்டிற்குள் முடங்கி யுள்ளோம் !
பொல்லாத காலராவைப் பிளேக்கை யெல்லாம்
பொலிவிழக்கச் செய்துபுற முதுகிட் டோட
நல்லபடி நம்முன்னோர் செய்த போல
நாமின்று செய்தாலே கொரோனா ஓடும் !
வீடுகளைச் சாணத்தில் மெழுகி னார்கள்
வீட்டின்முன் வேப்பிலையைச் சொருகி னார்கள்
கூடுதலாய்ச் சாம்பிராணி புகையைப் போட்டுக்
கூடத்தில் வேப்பெண்ணெய் விளக்கை வைத்தார் !
வீடுதேடி யார்வரினும் கைகால் கழுவி
வீட்டிற்குள் நுழையவைத்து வணக்கம் சொன்னார்
கேடுவரா சீரகநீர் இஞ்சிச் சாறு
கேழ்வரகுக் கூழ்தந்தே உபச ரித்தார் !
நீர்நிலைகள் பாதுகாத்தார் மலையைக் காட்டை
நிறைந்தவெழில் இயற்கைதனைப் பாது காத்தார்
ஊர்சுற்றி மரம்வளர்த்தார் மாசே யின்றி
உயிர்வளியில் வானத்தில் தூய்மை காத்தார் !
வேர்போல உழைத்துடலில் வலிமை காத்தார்
வேறுபாடின் றன்புடனே அணைத்து வாழ்ந்தார்
சீர்போலப் பேணிமுன்னோர் வழியை ஏற்றே
சிதைக்கின்ற நோய்விரட்டி வாழ்வோம் வாரீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.