சோளக்காட்டு பொம்மை
சவப்பெட்டியின் மேல்
சிலுவையின் ஆயுளை
நிர்ணயிக்கிறான் தச்சன்.
*****
சரியான கால்களில்
செருப்பு அணிந்து நடக்கிறான்
அறுந்து போகிறது பால்யம்.
*****
வானிலை மையம்
மழையில்லா இடத்தை கோடிட்டு க் காட்டிடும்
நகர்த்திய பழுது மகிழுந்து.
*****
ஒளியுடன் பயணிக்கிறது
பார்வையற்ற யாசகன் விட்டுச்சென்ற
தொடர்வண்டி கீதம்.
*****
கண்டெடுக்கப் படுகிறது
நேற்றைய இருளில் தொலைந்த
பட்டாம் பூச்சியின் வண்ணம்.
*****
அடக்கி வாசிக்கப்படும்
அம்மாவின் தொடர் இருமல்
தேர்வுக் கட்டண இறுதி நாள்.
*****
வரைந்த பச்சோந்தி
வண்ணம் பூசுகையில்
குழம்பும் ஓவியன்.
*****
மழையுடன் ஆலங்கட்டி
சேகரிக்கிறது சட்டைப்பையில்
சோளக்காட்டு பொம்மை.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.