பகலில் இரவு
இமைகளின் இறுக்கம் விலகிவிடாதபடி
தூக்கத்தை மேலும் நானே மிகுத்து
மிக வலிந்து அழைத்துக்கொண்டேன்!
கனவொன்றும் ஏற்படாமல்
வெறுமையான தூக்கம் வேண்டாம் என்று
செயற்கைக் கற்பனைகள்
ஏதேதோ குவித்து, கன்வொன்றை
அடுக்க முனைந்தேன்!
இரவுநேர விளையாட்டன்று;
இது பகல் நேர மன்றாட்டு!
இரண்டாம் அலையில்
சிக்கிக்கொண்ட இந் நேரத்தில்
ஊரார்கள் ஆட்டமெல்லாம்
அடங்கியுள்ள பொற்காலம்!
முதல் அலையில் முக்கால் அளவு
மூழ்கிய அனுபவம் மேலிட்டுள்ளது!
விழித்தால் பசி வந்து ஒட்டிவிடும் என்ற
அச்சம் மிக மேலிடவே
இப் பகல்பொழுதை
இரவாக்கிக் கொண்டேன்!
ஒருவழியாக நிலவு கொஞ்சம் எட்டிப்பார்க்க
மாலை நேரம் வந்து
வயிற்றில் கொஞ்சம்
வற்றிய பாலை வார்த்தது.
பசியில்லாமல் பகல்பொழுதைத்
தூக்கத்தின் துணைகொண்டு
ஒருவழியாகக் கழித்துவிட்டேன்!
ஆனந்தம்! பேரின்பம்!
இரவுக்கும் நிலவுக்கும் ஆயிரம் முத்தங்கள்!
சாலையோரத் தார்ப்பாய் மாளிகையில்
தற்போது முறைப்படி இரவுத்தூக்கம்!
- ஜெ. கார்த்திக், கரூர்

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.