விழிப்புணர்வு

பெருந்தொற்றுக் காலமிது பிரபஞ்ச ஓலமிது
விருப்பமுடன் வீடடங்கு வீணாகச் சுற்றாதே
கருத்துடனே முகக்கவசம் கண்டிப்பாய் அணிந்துகொள்
இருந்துவிடு கூட்டமெனில் இடைவெளியைப் பேணிவிடு
தடுப்பூசிப் போட்டுக்கொள் தயவுடனே அதுகாக்கும்
கொடுமையிது கரோனாவைக் கொன்றழிக்கக் கரம்நீட்டு
அடுக்கடுக்காய் உயிர்ப்பலிகள் அதனாலே கவனங்கொள்
நடுங்காதே மனதிற்குள் நற்றுணிவை வளர்த்துக்கொள்
உயிர்வளியைப் பேணுதற்கு உடற்பயிற்சி சிரமேற்கொள்
உயிர்காக்கும் தமிழ்மருந்தை உணர்ந்ததனைத் தினமுட்கொள்
செயலெனவே தியானமதால், செய்மூச்சுப் பயிற்சியதால்
வயிற்றுக்குச் சத்துணவால் வென்றிடலாம் கரோனாவை
நேர்மறையாய் எண்ணங்கள் நெஞ்சுக்குள் வளர்த்துக்கொள்
நீர்க்கோல வாழ்வதனை நிறைவாக வாழ்ந்திடலாம்
போர்க்காலக் களப்பணியால் புரிந்திடலாம் முன்னேற்றம்
ஊர்க்காக உதவிடுக ஒன்றாக இணைந்திடுக
அங்கங்கே தொட்டுவிடின் அடிக்கடிகை கழுவிக்கொள்
எங்கெங்கே இருந்தாலும் இருக்கட்டும் முகக்கவசம்
பங்கமின்றி விழிபபுணர்வால் பல்லுயிர்கள் வாழுதற்கு
தங்குதடை ஏதுமின்றித் தனித்திடுக துணிந்திடுக
கொன்றிடுவோம் கரோனாவை கொள்கையென உயிர்காப்போம்
தின்றதுயர் தீர்த்திடுவோம் தெளிந்திடுவோம் நலங்கொள்வோம்
என்றென்றும் நம்நாட்டின் இறையாண்மைக் காத்திடுவோம்
வென்றிடுவோம் கரோனாவை விழித்திடுவோம் நமக்காக.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.