திருநங்கை

கடவுளாக்கப்பட்ட நீங்கள்
காணிக்கைக்காகக் கையேந்தி...
வரலாற்றை உடைத்தே
உயர்வு பெற்றீர்...
இழிவாகப் பேசும் மாக்களிடை
நீங்களும் மனிதர்களாக...
மடமை உண்ட மனிதர்கள்
எல்லாம் கழுகளாய்
காய்ந்து போய்க் கிடக்கின்றனர்
கொத்தித் திண்ண...
இரையாகியது போதுமே..
விழித்துவிடுங்கள் என்று
சொல்லவில்லை... விரிந்து விடுங்கள்
விசாலமான உலகத்தில்...
வியப்பான வளர்ச்சியிலே...
கணிதம் படித்து கணினிதொட்டு
சீர்பெற்றீர் சிந்தனையிலிருந்து...
அக்காவாக அண்ணனாக மட்டுமல்ல.
அறிவுலகத்தில் மானுடனாக
புழுவாய் உழலும் அஃறிணை
சிந்தனை மாந்தர்களின்
மடியில் இருந்து
விடுத்துக் கொள்ளுங்கள் உங்களை...
கடவுளாக்கினால்
காட்சிப்படுத்தி விடுவார்கள்..
மனித மனத்துடன் நோக்கும்
மனங்களுக்கு பஞ்சமாகிப் போனதே.
வக்கிர சிந்தனையுள் நடமாடும்
யாவும் மனிதர்கள் இல்லை...
கடவுளாக பார்க்கும் உங்களை
மனிதர்களாகப் பார்க்கும் மனங்கள்
குறைவினும் குறைவே...
புழுத்துத் தொங்கும் வக்கிரச்சிந்தை
இங்கே வண்ணாடைக்குள்
ஒளிந்து கொண்டுள்ளது...
கடந்து செல்லுங்கள்
மடவார்களினை மண்ணில்புதைத்து
காலூன்றிச் செல்லுங்கள்
விந்தையான உலகில் வெளுக்காத
சாயப்பட்டறை நீங்கள்...
அர்த்தமுள்ளதாய் மாற்றிவிடுங்கள்
உங்கள் வாழ்வுதனை
உலகில் மனிதர்களாக யாரேனும்
இருப்பார்கள் என்றால் மட்டும்
தோளிட்டுச் செல்லுங்கள்
தோழனாய்... தோழியாய்...
- ச. உமாதேவி, திருப்பாலை, மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.