காலம் கடந்தும்...
காலத்தைக் கடந்து
கண்முன் நிற்கிறது
கரையாத மண்சுவர்
*****
எப்போதும் இரவில்
நிழலோடு பேசுகிறது
தனிமையில் இனிமை
*****
உடைந்த பின்னரும்
உறைந்திருக்கிறது புன்னகை
புத்தரின் முகத்தில்
*****
நிலவோடு விளையாடும்
கண்ணாமூச்சி விளையாட்டு
காற்றிலாடும் மரக்கிளை
*****
ஒளிந்திருக்கும் இசையை
உட்புகுந்து வெளியேற்றும்
மூங்கிலில் காற்று
*****
சோறூட்ட அம்மாவை
அழைக்காத குழந்தை
கையில் ஆண்ட்ராய்டு போன்
*****
வண்ணக் கோலம்
வாசலில் அழியாமல்
குழந்தைகளற்ற வீடு
*****
கவனிப்பாரின்றி
வீடு நிறைந்திருக்கும்
படிக்கப்படாத புத்தகங்கள்
*****
பிள்ளைகளால் துன்புறும்
பெற்றோர் போற்றுகிறார்
குழந்தை இலாத் தம்பதியர்
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.