இருளுடன்... போராடி...!

தூரத்துத் தனிமையில்
பாழடைந்த வீடொன்றில்
யாரோ ஏற்றிச்சென்ற
எண்ணெய் தீர்ந்து போகும்
நிலையில்
எரிகிறதொரு தீபம்.
தீபாவளி கொண்டாடும்
நயனங்களுக்கு
அந்திப்பொழுதின்
மங்கலான வெளிச்சமென்பது
இடர்ப்பாடென்று எண்ணி
தன்னைச் சார்ந்தவர்களுக்காக
ஒளியினைச் சிந்தி
தன்னிச்சைக்குத்
தானே எரிந்து
சாம்பலாகட்டுமென்று
யாரோ விட்டுச்சென்ற
அகல் விளக்காகவும்
இருக்கலாம் அது.
கதிரவனும்
உதவிட இயலா ஆதங்கத்துடன்
முகில்களின் பின்னணியில்
படுத்துள்ளான்
மரண படுக்கையில்.
கட்டுப்பாடற்ற
மூழ்குதல்களைப்போல்
அந்தகாரத்தைத் தன்னுடன்
எடுத்துச் செல்ல
தயங்குவதில்லை அவன்.
இன்றவன் மரணித்து
நாளையே உயிர்த்தெழுவது
நிச்சயம்.
ஆனால் இந்த தீபம்
நாளை ஒளிருமா
என்பது சந்தேகமே.
திக்கெட்டிலிருந்தும்
பயங்கர காரிருள்
பிரவேசிக்கிறது.
வீட்டுச்சுவர்கள்
உயிர்விடுவதைப்போல்
நான்கு பக்கங்களிலிருந்தும்
அழுத்துகின்றன.
முறிந்து போன
சன்னல் கதவுகள்
பெருங்காற்றிலே
சிறகொடிந்த பறவைகளைப் போல்
சீற்றத்துடன் பட படக்கின்றன.
காற்று, மழை, இடி, மின்னல்
முழக்கமெல்லாம்
வாஸ்தவத்தில்
ருத்திர பிரளயத்தின்
அறிகுறிகளாகத்
தோன்றிடினும்
தீப ஒளியை
அணைத்துப் பார்த்திட
இயற்கை புரியும்
சதியே அவை.
இறுதி நொடிவரை
இருளுடன் போரிடும்
நிர்பந்தம்.
ஜீவ மரணப்
போராட்டத்தினிடையே
சுடரின் ஈன ஒளி
சுழற்காற்றை
எதிர்கொள்ள இயலாமல்
சிலந்தி வலையைப் போல்
ஊசலாடுகிறது.
கருங்கடலொன்று
பொங்கியெழுந்து
என் கண்களை நோக்கி
முன்னேறி வருகிறது.
இன்னும் சில நொடிகளில்
இதயத்துடிப்பு
நின்று விடக்கூடும்.
ஆத்ம ஜோதி
சூறாவளி காற்றின்
ஆர்பாட்டத்திற்கு தத்தளித்து
நிசப்தத்தில்
நிலைத்திடக்கூடும்.
ஆயினும் மீண்டும்
எரியத்துடிக்கும்
அகல் விளக்கின்
மன உறுதி நிரந்தரமானது.
- முனைவர் வே. புகழேந்தி, பெங்களூரு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.