தன்னம்பிக்கையே வெற்றி தரும்
மண்பெயர்த்துச் சீதையினை எடுத்துச் சென்றும்
மனத்திட்பம் இராவணனை அழித்த தன்று
கண்ணகியின் மனத்திட்பம் கணவன் மீது
கற்பித்த களங்கத்தைத் துடைத்த தன்று !
விண்மீது பறப்பதற்குக் கொண்ட திட்பம்
விளைந்ததுகல் பனாசாவ்லா வாழ்க்கை தன்னில்
எண்ணங்கள் திட்பமானால் செயல்க ளாகி
ஏற்றத்தைத் தந்துவெற்றி மாலை சூடும் !
தாய்வீட்டை விட்டுத்தன் கணவன் வீட்டில்
தன்வாழ்வைத் துவக்குதற்கு வந்த பெண்ணோ
ஏய்த்திடுவர் நடத்திடுவர் அடிமை யாக
என்றச்சம் கொண்டிடாமல் மனத்திட் பத்தில்
வாய்த்திட்ட சவாலாக ஏற்றுக் கொண்டு
வளைவதெல்லாம் நிமிர்தற்கே எனவ ணைத்து
தோய்ந்துபணி குடும்பத்தில் ஆற்றும் போதே
தோல்வியின்றி வெற்றிவந்து மாலை சூடும் !
வீட்டிற்குள் முடங்கிருந்த பெண்க ளின்று
வீதிகளில் நடப்பதெல்லாம் மனத்திட் பத்தால்
ஏட்டினையே தொட்டிடாத பெண்க ளின்று
ஏந்திகல்வி கற்றதெல்லாம் மனத்திட் பத்தால் !
நாட்டினையே ஆளுகின்ற திறமை யின்று
நன்றாகப் பெற்றதெல்லாம் மனத்திட் பத்தால்
நீட்டியவர் கேட்டிட்ட உரிமை யின்று
நிறைவாக பெற்றதெல்லாம் மனத்திட் பத்தால் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.