சிந்தும் பருக்கைகள்
வாலாட்டிக் கொண்டே
அண்ணாந்து பார்க்கிறது
குழந்தை சிந்தும் பருக்கைகள்
*****
ஆசிரியரின் வீடு
அடையாளமாய் இருக்கிறது
மூங்கில் பிரம்பொன்று
*****
தள்ளுபடி செய்யப்படாத
விவசாயியின் கடன்
முதிர் கன்னி மகள்
*****
அம்மாவின் நினைவில்
நிலைத்து நிற்கிறது
குழந்தையின் முதல் முத்தம்
*****
வீடு முழுதும்
வாசம் நிறைக்கின்றன
அப்பா உண்ணும் மாத்திரைகள்
*****
துக்கத்தை மறைக்க
பளிச்சென்று தெரிகிறது
அஞ்சலிச் சுவரொட்டி
*****
வாழும் போது மறைந்தவர்
விரைவாக எழுதுகின்றனர்
அஞ்சலிக் கவிதைகள்
*****
வீட்டுச் சேவல்
காவு கொடுக்கப்படும்
விருந்தினர் வருகை
*****
அஞ்சலி வாசகத்தை
ரசித்து எழுதுகிறான்
உள்ளூர்க் கவிஞன்
*****
தேநீர்க் கிண்ணத்தில்
நிரம்பி வழிகிறது
சோம்பல் ஹைக்கூ
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.