விடைபெறுவது எப்போது...?
வெள்ளென எழுந்து,
வேலைக்கு போகும் கணவருக்கு
வேண்டியன செய்து...
பள்ளிக்குப் போகும் பிள்ளைகளைப்
பல் தேய்த்து, குளிக்க வைத்து,
சாப்பிட வைத்து,
பஸ்ஸில் ஏற்றி விட்டு...
'கட்டிய சோறில் மிச்சம்,
கலந்த காப்பியில் கொஞ்சம்'
என எல்லாவற்றையும்
வயிற்றுக்குள் கொட்டி...
அடுப்பில் ஒட்டிய
பிசுக்கையெல்லாம்
துடைத்தெடுத்து...
அங்கங்கேக் கழட்டி வீசிய
துணிகளைத் துவைத்தெடுத்து...
உப்பு, காரம் சரிபார்த்து
சாப்பாடெல்லாம் செய்து முடித்து...
சாயுங்காலம் வீடு திரும்பும்
குழந்தைகளுக்கு விரும்பும்
சிற்றுண்டி செய்து கொடுத்து...
தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டு...
தோசைக்கு மாவு அரைத்து வைத்து...
வீட்டுப் பாடம் முடிக்க வைத்து,
வீண் வாதங்களையெல்லாம்
தீர்த்து வைத்து...
மிச்சம் வைக்காமல் சாப்பிட வைத்து...
பாதியில் கார்டூனை நிறுத்தி விட்டு,
பத்து மணிக்கெல்லாம் படுக்க வைத்து...
மறுநாளுக்குத் தேவையான காய்களை
நறுக்கி வைத்து...
இத்தனை வேலைகளையும் முடித்து,
''இடுப்பு வலிக்கிறது'' என்று புலம்பும் பெண்ணிடம்...
''வீட்டில் வெட்டியாய் இருக்கும்
உனக்கே வலி என்றால்,
எட்டு மணி நேரம் வேலை செய்யும்
எனக்கு எப்படி இருக்கும்?''
என்ற குரல்கள் கேட்காத வீடுகள்
என்று வருமோ, அன்று தான்...
எதார்த்தம்...
இப்போது இதுபோல
எப்போ வருமோ என்ற ஏக்கமே
கதவடைப்பு விடைபெறுவது எப்போது...?
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.