வாழ்க்கைக்கு உதவும் பாடம்
குரூர மனம்
பார்த்து ரசிக்கிறது
தூண்டிலில் துடிக்கும் மீன்
*****
பத்தியின் வாசனைப் புகை
மங்கலாகத் தெரிகிறது
புத்தரின் கருணை முகம்
*****
அடுப்பூதும் குழல்
நெருப்பைத் தூண்டுகிறது
காற்றில் வரும் இசையொலி
*****
காற்றில் வேகமாய்ப்
படபடக்கும் புத்தகத்தில்
ஆடும் மயிற்பீலி
*****
வீட்டுப் பரண் மீது
மறைவாகக் கிடக்கும்
காதலியின் கடிதங்கள்
*****
விடியற் காலையில்
எப்போதும் தோன்றும்
சில நல்ல கவிதைகள்
*****
அமைதியாய் வீடு
ஆக்கிரமிக்கிறது மெள்ள
அதிகாலைப் பனி
*****
குடிசை வீடு
காற்றில் அசையும்
உதிரும் இலைகள்
*****
பேரளவுப் பசி
ஓரளவுத் தணிவிக்கும்
பானையின் குளிர் நீர்
*****
கணக்காசிரியர் கல்வி
வாழ்க்கைக்கு உதவுகிறது
கடன் வாங்கிக் கழித்தல்.
- இளவல் ஹரிஹரன், மதுரை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.