ஏன்? எதற்காக?

ஒரு இனத்தின் அடையாளம் சிதைந்தது...
சிதைந்ததை நினைத்துச் சிந்தித்தது யார்?
உலகத்தைக் கட்டியாளும் ஐநாவே.
ஐயம் கொண்டு தள்ளி நின்றது ஏன்?
துப்பாக்கி சன்னங்கள் பதம் பார்க்க
துண்டு துண்டுகளாகச் சிதறியது.
பல நாள் கட்டிய கோபுரங்கள்.
பல பேரின் பலப்பரீட்சையால்.
பாழாப் போனது ஒரு இனம்.
சமயம் மொழி வேறாக இருந்தாலும்,
எல்லா உயிரும் இறைவன் படைப்பல்லவா?
எல்லாம் அதிகார வர்க்கத்தின் ஆட்டமல்லவா?
சுதந்திர தேசமாய் ஒளி விட்டுப் பிரகாசித்த
சுதந்திர தேசம் ஆப்கானிஸ்தான் அல்லவா?
இன்று மரண ஓலங்கள்
வீதி எங்கும் பிணக் குவியல்
அதிகார வர்க்கத்தின் கையில் சிக்கித் தவிக்கும்
அந்த மக்களைக் காப்பாற்ற யார் வருவார்?
அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும்
அவலத்தின் நிலையைக் காணலாம்.
வளர்ந்த நாடுகள் தங்களின் சுகபோக வாழ்வுக்காய்ம்
வளர்ந்து வரும் கனிம வளத்துக்காய்,
ஒரு இனத்தையே அழிக்கத் துடிக்கிறது.
ஒரு நாள் அந்த இனமே அனுபவிக்கும் காலம் தூரமில்லை.
உடைமைகளை இழந்த உறவுகள்,
உயிரைக் கையில் பிடித்த வண்ணம்,
தப்பினால் போதும் என்ற மனசுடன்
விமான சக்கரத்தில் சிக்கிக் கொண்டு
உயிர் விட்ட ஆப்கானிஸ்தான்
மக்களுக்கு உத்தரவாதம் அளிப்பது யார்?
உலகம் இருண்டதாக நினைத்து,
கண்ணை மூடிக் கொண்டு
பால் குடிக்கும் பூனை போல,
உலகம் கண்ணை மூடிக் கொண்டு
மௌனம் காப்பது ஏன்? எதற்காக?
துயர் பட்ட ஆப்கானிஸ்தான் மக்களின்
வாழ்வில் எப்போது விடியல் பிறக்கும்?
என்னும் ஏக்கத்துடன்...
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.