எப்போது?

எப்போது என்ற வார்த்தையை
கேட்கும் போதெல்லாம்
நெஞ்சுக்குழி அடைத்துத்தான் போகிறது...
எப்போது பாஸ் பண்ணுவ ?
எப்போது டிகிரி முடிப்ப ?
எப்போது நல்ல வேலையில சேருவ ?
எப்போது கை நிறைய சம்பாதிப்ப ?
எப்போது வீடு கட்டுவ ?
எப்போது கல்யாணம் பண்ணுவ ?
எப்போது குழந்தை பெத்துக்கவ ?
எப்போது இன்னொரு குழந்தை ?
எப்போது குழந்தையை ஸ்கூல் சேர்ப்ப ?
எப்போது குழந்தைக்கு சொத்து சேர்ப்ப ?
இப்படி எப்போது?எப்போது? என்ற
ஏராளனமான கேள்விகள்
இப்பிரபஞ்சம் முழுதும்
பல சுமைதாங்கிகளை நோக்கி வீசப்படலாம்
படிப்பில் விருப்பம் இல்லாதவன்
தனி திறமையிருந்தும்
முட்டாள் என்று பச்சை குத்தப்படுவான்
கிடைத்த வேலையைக் குடும்பத்துக்காக செய்பவன்
போக்கெடுத்தவன் என்று ஏளனப்படுத்தப்படுவான்
வறுமைக்காகக் கல்யாணத்தைத் தள்ளிப் போடுபவன்
சிறுமையாகப் பார்க்கப்படுவான்
பிள்ளையில்லாதத் தம்பதிகளை
மலடர்கள் என்று பட்டம் சூட்டுவீர்கள்
ஒன்றும் இல்லாதவனைப் பார்த்து
ஒய்யாரமாய் கைகொட்டிச் சிரிப்பீர்கள்
கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவனை
எல்லாம் நேரம் அதான் இதெல்லாம்
முன்னுக்கு வந்திடுச்சுன்னு
முதுகுக்குப் பின்னே
வாயுத்தொல்லை போல
உங்கள் கதறலை பொறுமிக் கொண்டே இருப்பீர்கள்
இந்த உலகத்தில் என்ன நடந்தாலும்
நீங்கள் மாறப் போவதில்லை
சட்டம் மட்டும் என் கையில் இருந்தால்
எப்போது? என்ற கேள்விக்கணைகள்
உங்கள் வாயிலிருந்து வரும் முன்னே
உங்கள் ஓசை வரும்
தொண்டைகுழிகளை வேரோடு
அறுத்து விட வேண்டும்...
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.